Thursday, November 3, 2011

நூல்களுக்காக நெய்கின்றேன்....

பல மாதங்கள் கழித்து என்னை பதிவு எழுத வைத்துவிட்டது இந்த சம்பவம். ஆதரவிற்கு நன்றிகள் :))


சிங்கப்பூரில் போன புதிதில் வானுயர்ந்த கட்டிடங்களையும், சுத்தமான சாலைகளையும் இன்னபிற மூன்றாம் உலக நாடுகளில் கிடைக்காத சிறப்புகளை பார்த்து வியந்திருக்கிறேன்.

நாளடைவில் (மேலும் பல நாடுகளை சுற்றியதில்) சில நாட்களில் பழகிபோனது பலநாட்கள் கழித்து அலுத்துபோய்விட்டது. அட இவ்வளவுதானா எப்படா நம்ம ஊர் அழுக்கு சாலையையும், அழுக்கில்லா மனிதர்களையும் பார்க்கலாம் என்ற ஆசையையே ஏற்படுத்தின.


இது சிங்கப்பூர்




இதையும் தாண்டி அலுக்காத ஒன்று உண்டென்றால் சிங்கப்பூரின் நூலகம்தான். இங்கே எல்லா இடங்களிலும் நூலகம் இருக்கும் எங்கு வேண்டுமென்றாலும் புத்தகம் எடுக்கலாம் எங்கு வேண்டுமென்றாலும் புத்தகத்தை திருப்பி கொடுக்கலாம் (மேலும் பல வசதிகள்). தேசிய நூலகத்தில் இருக்கும் ஒருசில தமிழ் புத்தகங்கள் தமிழ்நாட்டில் கூட இருக்குமா என்பதே என்பது என்னளவில் சந்தேகமே. (மன்னிக்க)


இது சென்னை



அது போன்ற நேரங்களில் ஏங்கியிருக்கிறேன் நம்ம ஊரில் ஏன் இது போன்று இல்லை என. தற்செயலாக சென்னையில் வண்டியில் கடந்து போகும் போது கவனித்து தெரிந்து கொண்டேன். பின்னால் பெருமை பட்டேன் இனி அது அது நீடிக்காது போல.

நல்ல இடம், அருமையான வசதிகள் ம்ம்ம் நம்ம ஆட்களுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

எது எடுத்தாலும் உலகத்தரம்னு புலம்புவர்களே கொஞ்சம் யோசிங்க இருக்கற தரத்தையே எப்படி வைத்திருக்கிறோம்னு.

சென்னைதான்...



நீங்க யாரும் சென்னை சிங்கப்பூர் ஆக்கவேண்டாம் குறைந்தபட்சம் இருக்கிறத கெடுக்காம இருக்கலாம் இல்லையா?.

இடம்தானே மாத்திட்டாங்க வேற இடத்தில இருக்கும் இல்ல என்று எதிர்கேள்வி கேட்பவரா நீங்கள்? அடுத்தமுறை வரும்போது குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிக்கொண்டுவருகிறேன் ;)

இனிமே அரசியல்வாதி யாராவது சென்னையை சிங்கப்பூரா ஆக்குவேன் என்று சொன்னா ”போய்யா __ண்ணை” என்று சொல்லுங்கள் தவறே இல்லை.


எழுத்தாளர் சங்கத்தின் அறிக்கை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்

மாநிலக் குழு அலுவலகம்

421,அண்ணா சாலை,சென்னை-600018

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும்

தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் புதிதாக சென்னை பள்ளிக் கல்வி இயக்கக (டிபிஐ) வளாகத்தில் அமைக்கப்பட உள்ள நவீன மைய நூலகக் கட்டடத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தமிழக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் இன்று (2.11.2011) அறிவித்துள்ளார். 1.1.2011 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவு, சமுதாய வளர்ச்சியில் நூலகங்களின் தலையாய பங்கு குறித்து அக்கறை கொண்ட அனைவருக்கும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.

8 ஏக்கர் நிலப் பரப்பில் மக்கள் பணம் 180 கோடி ரூபாய் செலவில் ஏற்படுததப்பட்ட இந்த நூலகத்தில் பொதுமக்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், குழந்தைகள் என பல தரப்பினருக்கும் பயன்படக்கூடிய நவீன கட்டமைப்புகள் உள்ளன. தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல மொழி நூல்களும் வைக்கப்பட்டுள்ளன. ஒலி, ஒளி தொகுப்புகள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன.

பல லட்சம் நூல்கள் வைக்கத்தக்க கொள்ளளவுடன், 1250 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வாசிக்கக் கூடிய அரங்குகள், சுமார் 800 பேர் அமரக்கூடிய வெளி அரங்கு, 30 பேர் அமரக்கூடிய சிறு சிறு அரங்குகளும் உள்ளன. ஒரு நவீன நூலகம் எவ்வாறு அமைய வேண்டும் என்ற கல்வியாளர்களின் கனவு குறிப்பிடத்தக்க அளவுக்கு நிறைவேற்றப்பட்ட கட்டடமாகத் திகழ்கிறது இந்த வளாகம்.

முந்தைய அரசின் தவறுகள் காரணமாக தமிழக மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்திய போது புதிய அணுகுமுறைகள் பற்றிய எதிர்பார்ப்புகளுடனேயே இருந்தார்கள். ஆனால் அஇஅதிமுக அரசு அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு மாறாக, அரசியல் பகையுணர்வுடன் செயல்படுவதிலேயே முனைப்புக் காட்டுகிறது. தலைமைச் செயலகக் கட்டடத்தைத் தொடர்ந்து இப்போது அண்ணா நூற்றாண்டு நூலகமும் மாற்றப்படுவது அந்த அரசியல் பகையுணர்வின் அப்பட்டமான வெளிப்பாடாகவே இருக்கிறது.

நூலகத்தை மாற்றுவதற்குச் சொல்லப்பட்டிருக்கிற காரணம் ஏற்கத்தக்கதாக இல்லை. அறிவு சார் பூங்கா அமையவிருக்கும் இடத்தில்தான் ஒரு பொதுநூலகமும் அமைய வேண்டும் என்பது மக்களை திசைதிருப்புவதற்கான மேலோட்டமான காரணமாகவே இருக்கிறது. டிபிஐ வளாகம் பள்ளிக் கல்வி சார்ந்த துறையினரும் மாணவர்களும் வந்துசெல்கிற இடம். அங்கு இப்படியொரு பொதுநூலகத்தை நிறுவுவது அந்த வளாகத்தின் செயல்பாட்டுக்கும் இடையூறாகவே அமையும். தனியொரு இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைந்திருப்பது அதனைப் பயன்படுத்துவோருக்கு எவ்வகையிலும் இடைஞ்சலாக இல்லை. தற்போதைய அண்ணா நூலக வளாகத்தின் இடப்பரப்பைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் மேற்கொண்டு பல முன்னேற்றங்களை ஏற்படுத்தி அதனை வலுப்படுத்த முடியும்.

குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது என்பது வரவேற்கத்தக்கதே. அதற்குப் பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்து புதிதாக ஒரு கட்டடத்தை அங்கு எழுப்ப முடியும். தேவையான உள்கட்டுமானங்களோடு அந்த மருத்துவமனை வளாகத்தைத் திட்டமிட்டு உருவாக்க முடியும்.

அதைச் செய்ய மனமில்லாமல், முந்தைய அரசால் கட்டப்பட்டது என்ற காரணத்திற்காகவும், அதற்கு முன் அஇஅதிமுக அரசு தலைமைச்செயலகத்தை அமைக்கத் தேர்வு செய்து பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் கைவிடப்பட்ட இடத்தில் இப்படியொரு கட்டடம் இருப்பதா என்ற தேவையற்ற ஆத்திரத்தாலும் தற்போதைய அண்ணா நூற்றாண்டு வளாகத்தை மாற்றுவது அரசியல் முதிர்ச்சியைக் காட்டவில்லை.

ஆகவே அரசின் இந்த முடிவை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. அரசு தனது முடிவைக் கைவிட்டு, நூலகம் சிறப்பாகச் செயல்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கோருகிறது. அரசு இதனை ஏற்க மறுக்குமானால் கல்வியாளர்கள், புத்தக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஆகியோரைத்திரட்டி மாநிலந் தழுவிய போராட்டத்தில் சங்கம் ஈடுபடும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

ச.தமிழ்ச்செல்வன் சு.வெங்கடேசன்

மாநிலத்தலைவர் மாநிலப்பொதுச்செயலாளர்

மேற்கண்ட செய்தியைத் தங்கள் இதழில்,வலைத்தளத்தில்,தொலைக்காட்சியில் வெளியிடுமாறு வேண்டுகிறோம்.

சு.வெங்கடேசன்

பொதுச்செயலாளர்


Monday, February 14, 2011

இந்திய தரிசனம் - திருப்பதி -சாமிக்கு விலைவாசி ஏறிடுச்சு


குடும்ப கொடைச்சக்கும், வேண்டுதல் கரைச்சக்குமாக ஒரு எக்ஸ்பிரஸ் திருப்பதி பயணம் போனேன். இப்போது 50 ரூ டிக்கட் ஒரு சில மணி நேரங்கள்தான் தருகிறார்கள் மீதியெல்லாம் ஒன்று இலவச தரிசனம் இல்லை 300 ரூ கொடுத்து தரிசனம். நேரமில்லாதவர்கள் எல்லோருக்கும் 300 தரிசனத்தை தவிர வேறு வழியில்லை.

என்ன செய்ய? சாமிக்கும் விலைவாசி ஏறிப்போச்சு போல... கோவிந்தா கோவிந்தா

*****************************************************************

மொத்த திருமலையும் ஏதோ கன்ஸ்ட்ரக்‌ஷன் சைட்டுக்குள் நுழைந்தது போல இருந்தது அங்கங்கே இடிச்சி, கட்டி..... ஒரு கோயில் எபெக்டே இல்லை

அப்புறம் ரூம் வாங்கலாம் என்றால் தனி ஆளாக வந்தால் ரூம் தருவது இல்லையாம். இது என்ன கொடுமை என்று தெரியவில்லை. என்னுடன் ஒருவர் சூட்டுடன் வந்து துருப்பிடித்த லாக்கரில் சூட் வைக்கமனமில்லாமல் குளிக்காமலே தரிசிக்க கிளம்பிவிட்டார்.

தள்ளு முள்ளு தரிசனம், ஆந்திர அழகு , திருப்பதி தரிசனத்தையும் தாண்டிய திருப்தி அதைச்சுற்றிய இயற்கை அழகு தரிசனத்தில் கிடைத்தது.





**********************************************************************************


திருப்பதி சென்று அங்கிருந்து சென்னை செல்ல வேண்டியிருந்ததது. காலையும் மதியமும் சாப்பாடு சரிவர இல்லாததால் இரவு சாப்பாட்டை திருப்பதியில் அதிரடி ஆந்திரா மீல்ஸுடன் சாப்பிடலாம் என நினைத்து இறங்கினேன்.

பஸ் ஸ்டேண்ட் எதிரில் உள்ள விக்ரம் என்ற பெரிய பள பளக்கும் ஹோட்டலுக்கு போனேன். பொதுவாக பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஹோட்டல்களில் சாப்பாடு நன்றாக இருக்காது. சரி பெரிய உணவகமாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று போனேன்.

உள்ளே போய் “ஆந்திர மீல்ஸ் ஸ்பெஷல்” ஒன்று ஆர்டர் செய்தேன். சர்வர் ஒரு முறை இரண்டு முறை கேட்டார். அப்புறம் ஒரு சீனியர் சர்வர் வந்து கேட்டு சார் இது 80 ரூபாய் கொண்டுவரவா என்றார். அப்பவே உசாரா இருந்திருக்கணும் தலையெழுத்து. சரி கொண்டுவாங்க என்றேன்.

சாப்பாட்டை போட்டு சாப்பார் கிண்ணத்தை கவுத்தேன். நன்றாக பிசைந்து (நடுவில் நெய் சர்வீஸ் வேறு) முதல் வாய் வைக்க போனேன் கையில் சோற்றுக்கு நடுவில் “ கரப்பான் பூச்சி”.

நிறைய பேர் சாப்பிட்டு கொண்டிருந்ததால் அவர்கள் நிம்மதியை ஏன் கெடுக்கவேண்டும் என்று சர்வரை கூப்பிட்டு காண்பித்தேன். அவர் அப்படியா வேற சாப்பாடு கொண்டுவருவதாக சொன்னார் நான் எனக்கு சாப்பாடு வேண்டாம் ஒரு சாத்துக்குடி ஜூஸ் (ப்யூர் தண்ணீர் கலக்காமல்)மட்டும் கொடுக்கச்சொன்னேன்.



கடைசியால் பில்லை பார்த்தால் ஜூஸோடு சேர்த்து சாப்பாட்டுக்கும் சேர்த்து போட்டு இருந்தார்கள். என்னவென்றால் ஒரு சாப்பாடு கணக்குதானாம் (ஒரு வாய் கூட வைக்கவில்லை) கரப்பான் பூச்சிக்கு வேண்டுமென்றால் 20 ரூபாய் குறைத்துகொள்வார்களாம்.

100 ரூபாய் கொடுத்து மிச்சம் இருந்த 40 ரூபாயையும் சர்வரிடமே கொடுத்துவிட்டு “நல்லா இரு ” என்று வாழ்த்தி விட்டு வ்ந்தேன்

நல்ல வேளை கரப்பான் பூச்சி அசைவ சாப்பாடு என்று அதிகம் கேட்காமல் விட்டார்களே என்ற சந்தேஷத்துடன் குட்டே பிஸ்கோத்துடன் சென்னைக்கு பஸ் பிடித்தேன்

Sunday, February 13, 2011

+கெட்டவார்த்தைகளும் சொல்லும் சேதிகளும்


எச்சரிக்கை: கெட்டவார்த்தைகள்/விருப்பமில்லாத மொழிநடை அங்கங்கே இருக்கும்.




சில சம்பவங்கள் - சில சிந்தனைகள்.

ரயில் நிலையம் 2 நிமிடங்கள் மட்டுமே நிற்கும் நின்றது. முன்பதிவு செய்தவர்கள் எல்லாம் ஏறிவிட்டோம். அந்த இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டியுள்ள வண்டி நகர்ந்தது. முன்னாள் ஏறியவர்கள் அவரவர் இருக்கைக்கையை கண்டுபிடிக்க முயற்சி செய்து கொண்டு, கண்டு பிடித்தவர்கள் பெட்டியை வைத்துக்கொண்டிருந்தார்கள். பின்னால் இருந்தவர்கள் வழிவிட காத்திருந்தார்கள் என்று வரிசை போல மெல்ல மெல்ல முன்னேறினேன்.

என் பின்னால் ஒரு 60 வயது பெரியவரும் வந்து கொண்டுருந்தார். எங்களுக்கு முன் ஏறியவர்கள் உட்கார மெல்ல மெல்ல முன்னேறிக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் என் பின்னால் இருந்த பெரியவர்


“ நின்னுக்கிட்டே இருக்கிறீயே அறிவில்லை? முன்னாடி போ” என்றார் (தெலுங்கு கலந்து )

“ என்னங்க இப்படி பேசுறீங்க? முன்னாடி ஆள் இருக்காங்க முடிஞ்சா நீங்க வேணா போங்க” என்றேன் வழிவிட்டு

பதிலுக்கு பெரியவர் “ போடா தே#%$*# பையா” என்றார்

***************************************************************************


என் நண்பன் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன். பெரம்பூரில் இருந்து கிளம்பி நண்பனும் நானும் வெளியே செல்வதாய் திட்டம். அவனுடைய தம்பியிடம் ஒரு முக்கியமான பேப்பரை கொடுத்துவிட்டு கிளம்பவேண்டும்.

4 மணிக்கு வருவதாய் சொன்னவன் 4.30 ஆகியும் வரவில்லை. அவனிடம் செல்போன் இல்லை. அவனே 1ரூ போன் பூத்திலிருந்து போன் செய்தால்தான் உண்டு.

மணி 5 ஆகியது வரவில்லை

மணி 5.30 ஆகியது வரவில்லை

மணி 6.30 ஆகியது வரவில்லை.

7.00 மணிக்கு பொறுமை இழந்த நண்பன் சொன்னான்
“ இந்த தே*#@$@ புள்ள எப்பவுமே இப்படித்தான். நாம் போகலாம்” ( சொன்னது உடன்பிறந்த தம்பிய)

***********************************************************************

மேலே சொன்ன இரண்டு சம்பவங்களிலும் சொன்ன கெட்டவார்த்தைகளிலும் அதற்கான அர்த்தத்தோடுதான் பேசுகிறார்களா? சென்னையில் இந்த “தே**** பையா” என்ற வார்த்தை ஒரு பொதுவான திட்டும் வார்த்தையாக, வெறுப்பை கொட்டும் வார்த்தையாக மாறிவிட்டது.


ஆங்கிலத்தில் எப்படி Mother F***er என்ற வார்த்தை உபயோகப்படுத்துகிறார்களோ அதே விதத்தில் பயன்படுத்துகிறார்கள்.
ஹாலிவுட் படங்களின் ஆங்கில உரையாடலில் இது போன்ற சரளமான கெட்டவார்த்தைகள் புழக்கம் சாதாரணம். தற்சமயம் ஒரு வார்த்தை இரு வார்த்தை என்பது ஆங்கில படங்களுக்கு இணைய மாறிவிடுமோ என்ற அச்சம் தோன்றாமலில்லை.

இது போன்ற ஒரு சூழலையா நம் குழந்தைகளுக்கு கொடுக்கப்போகிறோம்?


Tuesday, February 8, 2011

இந்திய தரிசனம் - குஜராத்

இரண்டு வார பயணமாக இந்தியாவிற்கு போனேன் அதில் கண்டதும், கேட்டதும்


முதலில் போன இடம் குஜராத்தில் கட்ச் பகுதி.

இது குஜராத்தின் மிக வறண்ட பகுதியாகும். வறட்சி என்றால் 3 நாட்களில் 3 லிப்கார்டு தீரும் அளவிற்கு. சில வருடங்களுக்கு முன் நிலநடுக்கம் வந்து ஊரே தரை மட்டமான ஊர். ஆனாலும் அதை மீளக்கட்டுவதில் வெற்றிபெற்றுள்ளது. நல்ல தொழில் வளர்ச்சி.

ஒரு சிறிய ஊரில் உள்ள துறைமுகத்தில் இந்தியாவின் 50 சதவீதத்திற்கு மேற்பட்ட கெமிக்கல் ஏற்றுமதி/இறக்குமதி செய்கிறார்கள் என்பதே ஒர் சிறிய சான்று. சாலை வசதிகள் மிக நன்றாக இருக்கிறது. (வட இந்தியாவின் மற்ற பகுதிகளை ஒப்பிடுகையில்)

நம் ஊரில் மாட்டுவண்டி போல இங்கே ஒட்டக வண்டிகளை பாரம் இழுக்க சர்வ சாதாரணமாக உபயோகப்படுத்துகிறார்கள். என்ன ஒட்டகங்கள் பார்ப்பதற்க்கு ஓட்டக + குதிரை கலவை போல இருக்கிறது.


பிஜேபியின் பல வருட ஆட்சிக்கு அத்தாட்சியாக எங்கும் கிலோ மீட்டருக்கு 2-3 பெரிய பெரிய கோவில்கள் தென்படுகிறது. அவ்வளவு பக்தி பரவசம் எல்லாம் ஒன்றும் காணோம்.

அப்புறம் மாண்ட்வி என்ற இடத்தில் உள்ள ராஜாவின் கோட்டை இரண்டு நூற்றாண்டு பழமையானது. ஆனால் இருக்கும் இடமோ உள்ளடங்கி நடுக்காட்டில் இருக்கிறது.





சுற்றிப்பார்க்கையில் ராஜாக்கள் அந்தக்காலங்களில் எவ்வளாவு சொகுசாக இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. உள்ளே முழுவதும் மார்பிளால் இழைத்து இருக்கிறார்கள். நிறைய இந்தி படங்கள் எடுத்து இருக்கிறார்கள். இங்கிருந்து சரியாக 100 கிமி தொலைவில் பாகிஸ்தான் பார்டர்.





அதிமுக்கியமான விசயம் உணவு. சோறு தவிர அனைத்திலும் இனிப்பு, இனிப்பு , இனிப்பு. சர்க்கரை வியாதியஸ்தர்கள் பஞ்சாபி ஹோட்டலுக்கு செல்வது நல்லது.




Sunday, January 16, 2011

சிறுத்தை - வசூல் வேட்டை



இரட்டை வேடம் செய்யும் படம். தெலுங்கு ரீமேக் படம். ஹீரோ போலீஸ் வேடத்தில் நடிக்கும் படம்.

மேற்சொன்ன ஹிண்ட் போதும் இந்த படத்திற்கு இது ஒரு டெம்ப்ளேட் கதைக்குள் வந்து விடும்.

- ஒரு வேடம் போலிஸ் இன்னொன்று திருடன்
- 1200 வருடத்திற்கு முன் வாழ்ந்தவர்களை போல அழுக்கான வில்லன்கள்
- லூசு ஹீரோயின்
- அடித்தால் 500 அடி போய் விழும் அளவிற்கு சண்டை

இந்த படத்திலும் மேற்சொன்ன விசயங்கள் உண்டு. ஆனால் அதையும் மீறி இந்த படம் பொங்கலுக்கு வந்த படங்களில் நிச்சயம் முதலிரண்டு இடத்தை பிடிக்க போவது உறுதி.

திருடன் கார்த்தியின் வாழ்வில் ஒரு குழந்தை குறுக்கிட யாரெண்டு பார்த்தால் அது இன்னொரு கார்த்தியில் கொண்டு விடுகிறது. கடைசியில் ஆள்மாறாட்டம் செய்து .....சுபம்.


இதிலென்ன சிறப்பு என்கிறீர்களா?

காமெடியில் சந்தானம் வழக்கம் போல ஸ்கோர் செய்துள்ளார். சிரிப்பலையாக இருக்கிறது தியேட்டர். இன்னொரு ஹீரோவாகவே வருகிறார்.
கார்த்தி - நடிப்பில் மெருகு ஏறிக்கொண்டே போகிறது. நல்ல ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான நடிப்பு. அதிலும் காமெடி நடிப்பில் சந்தானத்துக்கு நன்றாக ஈடுகொடுத்திருக்கிறார். அதிலும் போலிஸ் வேடம் நன்றாகவே பொருந்துகிறது.

மயில்சாமி ஒரு சில காட்சி என்றாலும் வயிறு குலுங்க வைக்கிறார்.

வழக்கமான இலக்கணப்படி லூசு ஹீரோயின் தமன்னா. அவர் முகத்தை விட அவரது இடுப்பை அதிகம் நடிக்க வைத்திருக்கின்றார்கள்.

அதிலும் ஆக்சன் நிறைந்த இறுக்கமான ப்ளாஷ்பேக்கிற்கு பிறகு காமெடியாக க்ளைமேக்ஸ் வருகையில் இருக்கம் தளர்ந்து படம் பார்ப்பவர்கள் கலகலப்பாக போகின்றனர்.


திரைக்கதையை பற்றி சொல்லியே ஆகவேண்டும். பட்டாசு பற்ற வைத்தது போல நகர்கிறது. எக்கச்சக்க லாஜிக் மீறல் சில இடங்களில் சொதப்பல் ஆனால் அதையெல்லாம் பார்க்கும் போது யோசிக்க வைக்காத திரைக்கதை. கடைசியில் காமெடியாக படத்தை முடித்ததில் இயக்குநரின் திறமை வெளிவருகிறது. பாடல் இல்லாமல் இருந்திருந்தால் தடை இன்றி போயிருக்கும். மேக்நா நாயுடுவின் பாடல் காட்சி தேவையே இல்லாத போர். மேக்நாவிற்கு வயதாகிவிட்டது நன்றாக தெரிகிறது.

மசாலா பிரியர்களுக்கு சரியான விருந்து.


சிறுத்தை - பாய்ச்சல் - அதிரடி சரவெடி மசாலா.

Tuesday, January 11, 2011

From Paris With Love - கெடா சோறு கொஞ்சம் மசாலா அதிகமாயிடுச்சு


நீங்கள் எப்படிபட்டவர்?
பழைய ரஜினி படங்கள் பார்த்தால் எப்படி யோசிக்காம வாய திறந்துகொண்டு பார்ப்பவரா?
ரொம்ப தத்துவ தார்மீகம் எல்லாம் பார்க்காமல் சுட்டு நல்லா சண்டை போட்டுக்கொண்டிருந்தால் விரும்பி பார்ப்பீங்களா?
அர்ஜுன், சரத்குமார், விஜயகாந்தின் தீவிரவாதிகளை பிடிக்கும் படம் என்றால் பிடிக்குமா?
சிங்கம், சாமி, விருதகிரி, போன்ற படங்கள் எல்லாம் பிடிக்குமா?
Authentic Cusine விட ரோட்டு ஓர பரோட்டா கடை அல்லது கெடாவெட்டி கறி சோறு பிடிக்குமா?

இதற்கெல்லாம் அனாசின் ஸ்டைலில் “ஆமாம்பா ஆமாம்” சொன்னால்

உடனே From Paris With Love படத்தை (டிவிடி வாங்கி/தரவிரக்கி) பார்த்துவிடுங்கள்.

சரத்குமார், வி.காந்த் போன்றவர்கள் காப்பியடித்த TAKEN என்ற அகில உலகம் போற்றும் மசாலா மன்னன் எடுத்த படம் இது

விக்கிலீக்ஸ் அமெரிக்க தூதரகங்களை நாறடித்துகொண்டிருக்க, இந்த படத்தில் ஒரு தூதரக வேலை செய்பவர் உளவாளியாகவும் இருக்கிறார்.

ஒட்டு கேட்கும் சாதனங்களை மற்ற தூதரகத்தில் பொருத்துவது போன்ற சாதாரண வேலைகள் செய்கையில், அவருக்கு ஒரு மேலிடத்தில் இருந்து போன் வருகிறது. ஒரு முக்கியமான அசைன்மெண்டிற்கு ஆள் அனுப்புகிறோம் அவருக்கு உதவியாக இரு என்று. அதற்கப்புறம் கதை என்றால் யூகிக்க முடிந்த லாஜிக் இல்லாத வஸ்து.

என்ன வி.காந்து படம் நினைவுக்கு வருகிறதா?.

முக்கிய உளவாளியாக ஜான் டிரவால்டோ வந்ததில் இருந்து சீட்பெல்ட் மாட்டிக்கொண்டு படம் ஜெட் வேகத்தில் போகிறது. லாஜிக் பற்றி எல்லாம் யோசிக்க நேரமேயில்லாமல்.



நடு நடுவே இந்த ரணகளத்திலும் உனக்கு கிளுகிளுப்பு கேட்குதா என்பது போல டிரவால்ட்டோவின் ரவுசும் நடவடிக்கையும். ஒரு அனுபவ உளவாளியை காட்டியிருக்கிறார்.

க்ளைமேக்ஸ் என்ன க்ளைமேக்ஸ் படமே க்ளைமேக்ஸ்தான். நடுவில் வரும் ட்விஸ்ட் ரசிக்க வைக்கும்.

ட்ரவோல்ட்டாவின் வசனங்களை எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை. அதுவும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் , முஸ்லீம் தீவிரவாதிகள் போன்ற விசயங்கள் அலுப்பை தருகிறது. சில இடங்களில் முகம் சுலிக்க வைக்கிறது.

கதாநாயகி அழகாக இருக்கிறார். சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறார்.

ட்ரவோல்ட்டாவை வைத்து இந்த படத்தை எடுத்திருப்பது யானையை வைத்து வித்தை காண்பிப்பது போல.

ஆனால் வித்தை நன்றாகவே இருக்கிறது.

From Paris With Love - ஜான் ட்ரவோல்ட்டாவின் மசாலா.






Sunday, January 9, 2011

ரியல் எஸ்டேட் - எங்கே செல்லும் இந்த பாதை??

சமீபத்தில் அவசர பயணமாக ஒரு வாரம் ஊருக்கு போக வேண்டி வந்தது. பெரும்பாலும் மருத்துவமனையிலேயே நாட்கள் கழிந்தது. இந்த பத்து நாட்களில் ஊரில் பார்த்ததில் கவலைக்கிடமான விசயங்களில் முதலிடம்...

ரியல் எஸ்டேட்

சமீபத்தில் ஒரு 10 மைல் மிச்சம் பிடிப்பதற்காக துறையூர் அருகில் மெயின் ரோட்டை விட்டு கிராமத்தினுள் நுழைந்து போனேன். பார்த்த அதிர்ச்சியில் புகைப்படம் எடுக்க மறந்துவிட்டேன். நல்ல உள்ளடங்கிய கிராமம். போன 5 மைல் தொலைவில் சாலையில் 2-3 பேர்தான் பார்க்க முடிந்தது. அந்த இடத்தில் லே-அவுட் போட்டு எதோ ஒரு நகர் என்று விற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு கொடுமை என்னவென்றால் அந்த நகர்க்கு போவதற்கு கூட வழியில்லை. துறையூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இன்று இந்த் நிலைதான்.

பெரும்பாலும் கட்சிக்காரர்கள்தான் இந்த கோடிகள் புரளும் வியாபாரத்தை நடத்துகிறார்கள். ஒரு துண்டு நிலம் விடாமல் எல்லவற்றையும் பிரிச்சிபோட்டு விற்றுக்கொண்டிருக்கிறார்கள்.




நிலம் வாங்க அட்வான்ஸ் கொடுத்து வந்த நிலத்திற்கு கிரயத்திற்கு முன் விலை அதிகரித்துவிடுகிறது. கண் முன் தெரியாமல் அப்படி ப்ளாட் போடப்படும் நிலங்கள் எல்லாம் உடனே வாங்கப்படுகிறதா என்றால் இல்லை. லேஅவுட் போடும் போதே வெளிப்புற, முன் இருக்கும் நிலங்கள் ஏற்கனவே புக் ஆயிடுச்சு என்று பொய் சொல்லி உள்ளடங்கிய கடைசியில் இருப்பதை முதலில் விற்கிறார்கள். லே அவுட்டில் முன்புறம் இருப்பது, மூலை இருப்பது (கடைக்கு) போன்றவற்றை அவர்களுக்குள்ளேயே கைமாற்றி விட்டு பிறகு அதிக விலைக்கு விற்கிறார்கள். (அதற்கு அவர்கள் செய்யும் மார்க்கெட்டிங் ஒரு தனி சப்ஜெட்)

இப்படி ஏமாற்றி விற்கப்படும் நிலங்கள் எல்லாம் வீடு கட்டப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. எதோ ஒன்றிரண்டு பேர் விடுகட்டுவார்கள். ஆனால் நகரத்தின் உட்புறத்திலேயே நிறைய இடம் காலியாக இருக்கும். அதில் பிரச்சினைகளை அலசினால் இன்னும் கட்டுரை பெரிதாக போய்விடும்.

முன்னெல்லாம் கிராமத்து பக்கம் போனால் 5-10 கிலோமீட்டருக்கு வயல் அல்லது காடு வரும் ஆனால் இப்போதோ தலைகீழ் சாலைவழியாக உண்மையான கிராமத்தை தரிசிக்க முடியாது போல.

இப்போது மக்களிடம் வாங்கும் திறன் அதிகரித்து உள்ளது. ( எல்லோரிடமும் அல்ல). சேமித்த பணத்தை நிலத்திலேயே முதலீடு செய்ய மற்ற வழிகளை விட நிலமே சிறந்ததாக இருக்கிறது. அதனால் ஷேர் மார்க்கெட் போல தினம் ஒரு விலையாக ஆகிவிட்டது.

இறுதியில் பணத்திற்கு மதிப்பு குறைந்து கொண்டே போகிறது.

இந்த சூழ்நிலையில் ஒரு அரசு மக்களிடம் நிதியை திரட்டி மக்களுக்கு பிரயோசனமான திட்டங்களை தீட்டினால் மக்களுக்கும் நல்லது. முதலீட்டாளர்களுக்கும் நல்லது. ஆனால் நிலைமை கைமீறியும் கண்டும் காணாதது போல அமைதியாக இருக்கிறது.

இந்த ரியல் எஸ்டேட் கூட்டணியில் அங்கம் வகிப்பவர்கள் இந்த மூன்று வகைக்குள் ஒருவராக மட்டுமே இருப்பர்

கரைவேட்டிகள்
ஒரே ஜாதி
ஒரே கட்சி
அந்த ஏரியாவின் ஊராட்சி/பேரூராட்சி தலைவர்கள் அவர்களின் உறவினர்.

அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. கட்சிக்காரர்கள் கொலுத்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏக்கர் கணக்கில் வாங்கி போரடித்துவிட்டது. இப்போது மலைகளை வாங்கத்தொடங்கி இருக்கிறார்கள்.




வெறும் எண்களாக இருந்த பணத்தை இப்போது நிலங்களாக மாற்றிவிட்டார்கள். எண்கள் ஏறலாம் இறங்கலாம் நிலம் அப்படியா?

இப்படி விளைநிலங்கள் எல்லாம் விலை நிலங்கள் ஆகிக்கொண்டிருப்பது வீட்டை இடித்து திண்ணை கட்டுவது போலத்தான்.

(ரொம்ப சீரியஸாக எழுதிட்டனோ???)


உங்களுக்கு இதுவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்

Related Posts with Thumbnails